காளிதாசர் படைப்புகளில் உவமையணி

in Article
Published on: 28 June 2019

B. Uma

Uma is a doctoral candidate at Jawaharlal Nehru University, New Delhi. Her work focuses on rhetoric in Tamil and Sanskrit literatures.

முன்னுரை
ஒன்றைப் போல் ஒன்று இல்லாத இரண்டு பொருள்களை ஒப்பிடப் பலசமயங்களில் உருவகமும் உவமையும் பயன்படுத்தப்படுகின்றன. உவமையில் போல, போன்று, மாதிரி என்று ஏதேனும் ஒரு சொல்லினால் (உவம உருபு) ஒப்புமை உணர்த்தப்படுகிறது. சமஸ்கிருதம், தமிழ் முதலிய இந்திய மொழிகளின் இலக்கியப் படைப்புகளில் உவமை பிரதான இடம்பெற்றிருக்கிறது. தமிழ்ச் சங்க இலக்கியங்களில் உவமையால் புகழ்பெற்ற புலவர்களும், பெயர் பெற்ற புலவர்களும் உண்டு. குறுந்தொகையின் 40 வது பாடலை பாடிய ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை, அதனால் அவர் பயன்படுத்திய புசெம்புலப்பெயல்நீர்பூ என்னும் உவமையைக் கொண்டே அவரது பெயரை பிசெம்புலப்பெயனீரார்பீ என அழைக்கின்றனர். 
உவமையணி தான் எல்லா அணிகளுக்கும் தாய் என்று தொனியலங்காரம் குறிப்பிடுகிறது. புஉவமை என்னும் தவலரும் கூத்திணூ பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து நீப்பறுமகிழ்ச்சி பூப்ப நடிக்குமேபூ என்கிறது. அதாவது உவமை என்னும் பிகூத்திபீ பல்வேறு அணிகளாக வேடமிட்டு வருகிறாள். உவமையை பிகூத்திபீ என்று அழகுப் பதுமையாக உருவகிக்கிறது.கவிதையின் அலங்காரக்கூறு மட்டுமல்லாமல், பேச்சின் அலங்காரக்கூறாகவும் உவமை விளங்குகிறது. வீரமிக்கவனைப் பார்த்துச் புசிங்கம் போல நடந்து வர்றான்பூ என்னும் வழக்கில், மனிதனின் வீரத்தை பறைசாற்றும் (வீர நடைக்கு) உவமையாக சிங்கம் வருகிறது. 
சமஸ்கிருதத்தின் மிகப்பழமையான வேதமான ரிக் வேதத்தில் பிஉபமாபீ என்னும் சொல் பயின்றுவருகிறது. 1.15,31, 5-34,93 ஆகிய இடங்களில் பிஉபமாபீ இடம்பெற்றுள்ளதாக அதை ஆராய்ந்த ஆர்.எஸ்.டே கூறுகிறார். ரிக் வேதத்தில் விடியற்காலத்தில் படிப்படியாக உதித்து எழும் உஷையைக் கூறும் பாட்டுகள் வருணனை நயம் மிகுந்து விளங்குகின்றன. புதாயினால் அழகுற அலங்கரிக்கப்பட்ட புதல்வியைப் போன்று தன்னை ஆடலழகியாக மெருகேற்றிப் பெருமை கொள்கிறாள் உஷை. தன் அழகின் மூலம் மக்களை இன்புற வைக்கிறாள். அந்த அழகை, புலவன் தம் அற்புதமான வர்ணனைகள் மூலம் நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். புஒளியை ஆடையாக அணிந்து கிழக்கே உதிக்கும் உஷை, தன் அழகை வெளிக்காட்டி விண்ணின் கதவுகளைத் திறக்கிறாள். அதன்வழி ஒளி வீசிக்கொண்டு வெளியை வருகிறாள்.பூ இவ்வாறு காண்போருக்கு காதலுணர்வூட்டும் பெண்ணாக உஷையை சுட்டுகிறார். 
 மகாபாரதத்தில் உள்ள உவமைகள் பற்றி ஆய்வு செய்த ராம்கரன் சர்மா மகாபாரதத்தில் 232 உபமானங்கள் இருக்கின்றன என்றும் அவை மீண்டும் மீண்டும் ஒப்பிடப்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறார். வால்மீகி ராமயணத்தில் 3642 உவமைகளை தனித்தொகுதியாக எம்.எம்.பாடக் தொகுத்துள்ளார். கம்பராமாயாணத்தில் எண்ணிலடங்கா உவமைகள் உள்ளன. கம்பர் மிகச்சிறந்த உவமைகளையெல்லாம் கையாள்கிறார். அவற்றுள் ஒரு உவமை இது: புஎப்பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் அப்பெண்தானே ஆயினபோது இங்கு அயல்வேறோர் ஒப்பு எங்கே கொண்டு எவ்வகை நாடி உரை செய்வோம்பூ அதாவது, நல்லோரைச் சுட்ட எல்லோரும் பயன்படுத்தும் மிகச்சிறந்த உவமை சீதை என்னும் பேரழகி. பெண்மைக்கு இலக்கணமாகத் திகழும் சீதைக்கு நான் எதை உவமையாகச் சொல்வது, எனவே சீதைக்கு உவமை சீதையே என்று கூறி வியப்பில் ஆழ்த்துகிறார் கம்பர்.  
சமஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் இல்லை. சமஸ்கிருத இலக்கிய நூல்களிலேயே மிகுதியானவர்களால் வாசிக்கப்பெற்றவை அல்லது அறியப்பெற்றவை காளிதாசரின் படைப்புகள். அதற்குக் காரணம் அவர் பயன்படுத்திய உவமை நயங்களே. அவரது கவிதைகளில் பொதிந்துள்ள உவமைகள் தான் அவருக்குப் புகழைத் தேடித்தந்தன. வெறும் சொல் அலங்காரத்தைக் காட்டிலும் உவமையில் தான் அவர் அதிக கவனம் செலுத்துகிறார். உதாரணமாக அவரது சில உவமைகளைக் காண்போம். மக்களிடையே வெகுவேகமாக பரவும் அவப்பெயருக்கு, நீரில் வேகமாகப் பரவும் எண்ணையை உவமைப்படுத்துகிறார்.நுரை ததும்பும் நீலக்கடலுக்கு,  நட்சத்திரங்களுடன் கூடிய நீல வானத்தை உவமையாகச் சுட்டுகிறார்.இந்துமதியுடன் கீழே விழுந்த அஜனுக்கு, எண்ணெய் சொட்டுடன் கீழே விழுகின்ற சுடரை உவமையாகக் கூறுகிறார். இந்த உவமைகள் எல்லாம் மிகப்பொருத்தமாக இருப்பதோடு,படிப்பவர் மனத்தைக் கவர்ந்து சிந்தனையைத் தூண்டுவனவாகவும் இருக்கின்றன. காளிதாசர் 1250-ம் மேற்பட்ட உவமைகளையும் உருவகங்களையும் தன் படைப்புகளில் கையாண்டுள்ளார். 
இந்திய அறிவு மரபில்  மரபிலக்கணம் போன்ற கடினமான துறைகளில் கூட உவமை அணியும் பிற அணிகளும் பயன்பட்டுள்ளன. சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மரபிலும் இதைக் காணலாம். இந்திய இலக்கியங்களில் சிலேடைகள், புதிர்கள், விடுகதைகள், பழமொழிகள் என அனைத்திலும் உவமையின் பயன்பாடு உண்டு.பூ, இலை, காய், கனி, பறவை, விலங்கு, தாவரம், மேகம், மழை, மின்னல் என இயற்கை சார்ந்த அனைத்தும் உவமையில் இடம்பெற்றுள்ளன. 
சொல்லவரும் கருத்தை தெளிவாக வெளிபடுத்தவும், கவிதையின் அழகை பன்மடங்கு உயர்த்திக் காட்டவும் அலங்காரம் அவசியமாகிறது. அவ்வாறு கவிதைக்கு மெருகேற்றம் அலங்காரம் இரண்டு வகைகளில் அமைகிறது. அவை:
1.    அர்த்தலங்காரம் 
2.    பதாலங்காரம்
உவமை(உபமா),உருவகம்(ரூபகம்), உத்ப்ரேக்ஷை முதலியன அர்த்தலங்காரத்திலும்,  எதுகை, மோனை, யமகம் முதலியன பதாலங்காரத்திலும் வரும். காளிதாசர் தன் படைப்புகளில் அர்த்தாலங்காரத்தையை அதிகமாகப் பயன்படுத்துகிறார். அர்த்தாலங்காரத்தின் கூறுகளில் முதன்மையானதாக விளங்கும் உவமையை தன் படைப்புகளில் பிரதானமாகப் பயன்படுத்துகிறார். அவற்றை அவரது படைப்புகள் வழி சுருக்கமாகக் காண்போம். 
 

மேகசந்தேசம்
மேகசந்தேசத்தில் மொத்தம் 124 சுலோகங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் அலங்காரக் கூறுகளைக் கொண்டவை.2,15,19,31,48,52,57,59,63,80,81,82,87,88,92,108 முதலிய பாடல்களில் மிகச்சிறந்த உவமைகள் இடம்பெற்றுள்ளன. தலைவி உடல் உறுப்புகளின்  அழகை பல உவமைகளால் வர்ணிக்கும் அற்புதமான சில பாடல்களும் விளக்கமும்.
பாடல்:1
புபிரியங்கு கொடி உடலும் மருண்ட மான்விழிகளும்
மதிமுகமும் மயில்தோகை ஒத்த கூந்தலும்
மெலிந்து ஓடும் நதியே உன் புருவநெறி அமைய
சினந்தோளே! உன்னுருவச் சிறப்புரைக்க
 ஒரே பொருளைக் காணேனேபூ (மேக.110)
பாடல் (விளக்கம்): 2
முகிலே அலகாபுரிப் பெண்கள் மின்னல் போன்ற உருவம் உடையவர், வானவில் போன்ற அழகிய வண்ண ஆடைகளை அணிபவர், அங்குச் சித்திரங்கள் நிறைந்த அரங்குகளில் முழங்கும் இடிபோன்ற முரசம், பாடலுக்கும் ஆடலுக்கும் இசைய அதிரும், நீர் நிறைந்த வாவிகளும், விண்மீன்கள் போன்ற மணிகள் குவிந்து வானைத் தொடும் உயர்ந்த மாளிகைகளும் அங்கு உள்ளன. உனக்குப் பழக்கமான சூழல் அங்கே உண்டு, புதிதாக ஓரிடத்திற்குப் போகிறோம் என்ற எண்ணமே உனக்கு உண்டாகாது (மே.2:1). 
பாடல் (விளக்கம்): 3
கொண்டல் தென் நாட்டைக் கடந்து பனிமலையில் ஏறுகிறது, அங்கு மலைத் தொடரிலிருந்து தெளிந்த நீருடன் கங்கை இறங்குகிறது, ஏறும் கருமுகில் இறங்கும் நீருள் பதிவது, கரிய யானை ஆற்றுக்கு எதிரே தன் உடலின் பிற்பகுதியை நீட்டிப்படுத்துக் குளிப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது (மே.1:15).   
மேகசந்தேசம் ஜெர்மன் மொழியில் மாக்சுமுல்லரும்,  ஆங்கில மொழியில் வில்லியம் ஜோன்சும்,இலத்தீன் மொழியில் பி.வோன்போலனும் மொழிபெயர்த்துள்ளனர். தமிழ், திபெத்து, சிங்களம் முதலிய பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்ப்பதற்குக் காரணம் காளிதாசர் கையாண்டுள்ள அணி இலக்கண கூறுகளும் கற்பனை நயங்களும் ஆகும். இந்தி நாடக ஆசிரியரான மோகன் ராகேஷ் இயற்றிய  பிரபலமான நாடகம் பிஆஷாத் கா எக் தின்பீ (ஆடி மாதத்தில் ஒரு நாள்), இது மேகசந்தேசத்தின் முதல் வரியாகும். 

இரகுவம்சம்
இரகுவம்சத்தில் மொத்தம் பதினெட்டு சருக்கங்கள் உள்ளன. இதில் முதல் எட்டுச் சருக்கங்கள் ரகு என்ற  அரசனைப் பற்றியும், அடுத்த எட்டுச் சருக்கங்கள் ரகுவம்சத்தைச் சார்ந்த இராமனைப் பற்றியும் கூறுகின்றன. பதினேழாவது சருக்கத்தில் அவன் பேரன் (குசலனின் மகன்) வரலாற்றையும், பதினெட்டாவது சருக்கத்தில் ரகு வம்சத்தைச் சார்ந்த இருபத்தியொரு அரசர்களையும், அக்னி வர்ணனைப் பற்றியும் கூறுகிறார். இயற்கை வருணனைகள், போர்க் காட்சிகள், காதர் களங்கள், மக்கட்பேறு, கொடை, வழிபாடு, உறுதிப் பொருள்கள் முதலிய விழுமியங்கள் நிறைந்தது இரகுவம்சம். இறுதி இரு சருக்கங்களை காளிதாசர் பாடவில்லை என்றும், பிற்கால கவிஞர்கள் பாடியதாகவும்  ஒரு கருத்து உண்டு. 
ரகுவம்சத்தில் காளிதாசர் கையாளும் சில உவமைகள்:
1.மேகசந்தேசம், ரகுவம்சம் ஆகிய இரண்டிலும் பெண்களின் தொடைக்கு ஒரே உவமையைக் கையாள்கிறார். அதாவது பெண்களின் தொடைக்கு வாழை மரத்தை உவமையாகச் சுட்டுகிறார். 
புநகக்கீறலற்ற அவளது வெற்றுத்துடையோ
நீண்டநாள் அணிந்த முத்துமாலைநீக்கிட
கூடலே அற்றதால் நீவிவிடுதலிழந்தாலும்
நீர்மேகம் காண வாழைத்தொடை துடித்திடுமேபூ (மேக.102)

புவாழைமரம் போல் தொடையுடை வஞ்சியேபூ (ரகு.666)

2.திலிப்பனும் சுதட்சினையும் தேரில் இனிய ஒலியுடன் காட்டுக்குப் போகும்போது, பொருள்களை அள்ளி வீசி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டு போனார்கள். அவர்கள் கடந்ததும் அவர்கள் ஏறிச் சென்ற வண்ணத் தேர் வானவில் போலக் காட்சித் தந்தது (ர.1:39).  
3.இராமனையும் இலட்சுமணனையும் பதினான்கு ஆண்டுகள் பிரிந்திருந்த அவர்களது தாய்மார்கள் கோசலையும் சுமித்ரையும் பிரிவு சோகத்தால் வடித்த கண்ணீர் வெண்மையாக (வெப்பமாக) இருந்தது. ஆனால், வனவாசம் முடிந்து திரும்பிய  இராமன், இலட்சுமணனைக் காணும் போது வழிந்த ஆனந்தக் கண்ணீர் தன்மையாக (குளிர்ச்சியாக) இருந்தது. அதை காளிதாசர் அற்புதமான உவமையால் உணர்த்துகிறார். அதாவது இமயத்திலிருந்து வந்த பனிநீர் வெண்ணீரையும் தண்ணீராக மாற்றுவது போல (ரகு.14:3) என்கிறார். 

அபிஞ்ஞான சாகுந்தலம்
காளிதாசரின் மூன்றாவது நாடகம் அபிஞ்ஞான சாகுந்தலம். சகுந்தலை அரசவைக்கு ஆர்வத்துடன் வந்து தான் துஷ்யந்தனுடைய மனைவி என்று அறிவித்தும், துஷ்யந்தன் அவளை ஏற்க மறுக்கிறான். அவள் கருவுற்றுள்ளதை அறிந்தும் அவள் மீது இரக்கம்  கொள்ளவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை அறிந்த அரசன் தன் கொடுஞ்செயலுக்குக் கழிவிரக்கம் கொண்டு சகுந்தலையின் ஓவியத்தை வரைந்து, அதைக் கண்டு பிதற்றுகிறான். அதனை காளிதாசர் ஆற்றில் இறங்கி நீர் அருந்துவதை விடுத்து கானல்நீரைத் தேடும் பித்தனே (சா.6:16) என்கிறார். 
இந்திய நாடக வரலாற்றில் சாகுந்தலத்திற்கும் முக்கிய இடம் உண்டு. இந்நாடகம் உலக மொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டுள்ளது.தமிழில் மறைமலையடிகள் அபிஞான சாகுந்தலம் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் வங்காளி, லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் பெயர்த்துள்ளார். இவரது மொழியாக்கத்தைப் படித்த ஜெர்மன் நாடக மேதை கோதே சாகுந்தலத்தை வானளாவிப் புகழ்கிறார். அதற்குப் பின்புதான் உலக மொழிகள் பலவற்றிலும் சாகுந்தலம் பெயர்க்கப்பட்டது. மராத்தி நாடகத்தின் தந்தை என்று போற்றப்படும் கிர்லாஸ்கர், காளிதாசரின் சாகுந்தலத்தைத் தழுவி  எழுதிய சகுந்தலா (1880) நாடகத்தில் உள்ள முதல் நான்கு அங்கங்களை முதல் முறையாக  மேடையில் நடித்துக் காட்டினார். மராத்தி அறிஞர்களுள் வடமொழியினை அறிந்தவர்கள் சமஸ்கிருத நாடகங்களை மராத்தியில் மொழியாக்கம் செய்ததோடு, புஇந்து காளிதாஸ் எல்பின்ஸ்டன் நாடக கழகம்பூ என்ற பெயரில் நாடகக் குழுவைத் தோற்றுவித்து அதன் மூலம் அந்த நாடகங்களை நிகழ்த்தினார். இது போன்றே குஜராத்தி நாடகத்தின் தந்தை என போற்றப்படும் ராண்சோத்பாய் உதயராம் தவே(1837-1923) காளிதாசரின் சாகுந்தலம், மாளிவிகாக்னிமித்திரம், விக்கிரமோர்வசியம் முதலிய நாடகங்களை மொழிப்பெயர்ப்பு செய்தார். தெலுங்கில் கந்துக்குரி வீரேசலிங்கம் (1848-1919) மொழிபெயர்த்தார்.

குமாரசம்பவம்
பிகுமாரசம்பவம்பீ முதல் அரசன் திலீபன் தொடங்கி கடைசி அரசன் அக்கினி வரை மொத்தம் முப்பது அரசர்களைப் பற்றிப் பேசுகிறது. ஆண், பெண் தெய்வங்களும், முனிவர்களும், துறவிகளும், பூவுலக மாந்தரான கதைத் தலைவனுடன் நெருக்கமான உறவு  கொள்கின்றனர்.  
முழுநிலவு நீல வானிலிருந்து தன் அமுதக் கதிர்களைப் நம்மேல் மொழிகிறது. அந்நிலவு தரும் இன்பத்தில் மயங்கிக் கிடக்கும் நாம், நிலவில் உள்ள மருவைக் காண்கிறோமா? அதைப் பற்றி நினைப்பதில்லையே! அதுபோல் நற்குணங்கள் நிறைந்த ஒருவரிடம் இருக்கும் துர்குணங்களை நற்குணம் மறைத்துவிடுகிறது(கு.1:3). 
குழந்தைக்குக் கிடைக்கும் புறச்சூழல், வேனிற்காலத்தில் அன்னப்பறவைக்குக் கிடைக்கும் கங்கையாற்றைப் போன்றது. அன்னம் பகுத்து அறிந்து சாரத்தை மட்டும் பருகவல்லது(கு.1:30).  

முடிவுரை 
இலக்கிய வாசிப்பில் படைப்பாளி முன்வைக்கும் கருத்தை வாசகர் எளிதில் புரிந்துகொள்ள அணி முதலான படைப்பு உத்திகள் துணைநிற்கின்றன. இலக்கியத்தில் அணியை பயன்படுத்துவதன் அடிப்படை நோக்கம் இதுவே. படைப்பின் வெற்றி அதன் சொல்லாட்சி, தேர்ந்தெடுக்கும் பாடுபொருள் முதலியவற்றில் இருந்தாலும், இலக்கிய அலங்காரமும் அவசியமானதாக் இருக்கிறது. அந்த வகையில் காளிதாசர் படைப்புகள் இலக்கிய அலங்காரங்களாலும் புகழ்பெற்றன.

பயன்பட்ட நூற்கள் (ஆகூஸஙீகூச்கீசுஹசிகுட்) 
இராமசாமி.மு.,மற்றும் சிலர்,1999. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை. 
இராமசாமிப் புலவர்.சு.அ.,1965. காளிதாசரின் நாடகக் கதைகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த் நூற்பதிப்புக் கழகம்,சென்னை.
கோவிந்தன்.த.,2002.காளிதாசன் உவமைகள், அநுராகம் பதிப்பகம்,சென்னை,பக்.32. 
சுத்தானந்தபாரதி,1939. மஹாகவி காளிதாசன் (காளிதாசன் வரலாறு,கவிநயம், இரகுவம்சம், குமாரசம்பவம், அபிஜ்ஞான சகுந்தலம்), அன்புநிலையம், திருச்சி.
நாராயணவேலுப்பிள்ளை,2009.காளிதாசரின் உலக மகா காவியங்கள், நர்மதா பதிப்பகம் சென்னை.
முத்துத்தம்பிப் பிள்ளை.ஆ.,1889. காளிதாச சரித்திரம், ரிபோன் பிரஸ்,சென்னை,பக்.58.   
ராமசாமிப்புலவர் சு.அ,1965. மாளவிகை திருநெல்வேலி  தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
ராமசாமிப்புலவர்.சு.அ,1965. பிரகுவமிசம்பீ திருநெல்வேலி தென்னிந்திய நூற்பதிப்புகழகம், சென்னை,
ராமசாமிப்புலவர்.சு.அ,1965.விக்கிரமோர்வசி,திருநெல்வேலி தென்னிந்திய நூற்பதிப்புக் கழகம், சென்னை,
வெங்கடராகவாச்சிரியர்.வங்கீபுரம்.ஸ்ரீ.,1946. பிரகுவம்ச மகாகாவ்யம்பீ (2ஸர்க்கம்), தி லிட்டில் பிளவர் கம்பனி, தி.நகர், சென்னை,
ஸ்ரீ சச்சிதானந்த தீஷிதர் சி.எஸ், 1949. பிசாகுந்தலம்பீ நடன குஞ்சிதபாத சபை புராண நிலையம், சிதம்பரம்.