சமஸ்கிருத அலங்கார மரபில் உவமையணியின் முக்கியத்துவம்

in Module
Published on:

B. Uma

Uma is a doctoral candidate at Jawaharlal Nehru University, New Delhi. Her work focuses on rhetoric in Tamil and Sanskrit literatures.

சமஸ்கிருத இலக்கிய-இலக்கண மரபுகள் இலக்கியத்தின் அலங்காரம் பற்றி ஆழமாகப் பேசுகின்றன. கவிதையின் உயிர்நாடியாக விளங்கும் உவமை இலக்கிய அலங்காரங்களில் முதன்மையானதாகத் திகழ்கிறது. கவிஞன் தன் கருத்தை எளிமையாக, நயமாக, உணர்வுப்பூர்வமாக வாசகனிடம் கொண்டுசெல்ல உவமையைப் பயன்படுத்துகிறான். உவமையை இந்த நோக்கில் பயன்படுத்தும் மரபு உலக இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானது. சமஸ்கிருத இலக்கிய மரபு இலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் அலங்காரக்கூறுகளில் முதன்மையானதாக உவமையை கொண்டாடுகிறது. இந்த உவமையின் வரையறை, வகை பற்றி உவமையணி என்னும் பெயரில் சமஸ்கிருத இலக்கிய-இலக்கண ஆசிரியர்கள் விளக்குகிறார்கள். உவமையணி பற்றிய செய்திகள் சமஸ்கிருதத்தின் தொடக்ககால இலக்கியங்களான வேதங்களிலிருந்து தொடங்குகிறது. ஆனால் உவமையணி குறித்த தெளிவான விரிவான கருத்துக்களை வேதத்திற்குப் பின் தோன்றிய இலக்கிய-இலக்கணங்களிலே அதிகம் காணமுடிகிறது. பழம்பெரும் நூல்களான யாஸ்கரின் நிருக்தா (கி.மு.7), பாணினியின் அஷ்டாத்யாயி (கி.மு.5) ஆகிய இரண்டும் உவமை பற்றி விளக்குகின்றன. யாஸ்கர் பெயர்ச்சொல், வினைச்சொல், உபசர்கம், நிபாதஸ் (ஒப்புமை) முதலானவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவற்றில் நிபாதஸ் என்ற பகுதியில் உவமைப் பற்றிப் பேசுகிறார். பாணினி தொகைகள், வேற்றுமை சொற்கள், சந்தி, தத்தித ஒட்டு முதலானவைப் பற்றிப் பேசுகிறார். பாணினி தத்தித ஒட்டின் ஒரு வகையாக உவமையைக் குறிக்கிறார். இவ்விருவரும் இலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் அலங்காரக்கூறாக உவமையணியை கருதுகின்றனர். ஆனால் உவமை பற்றிய விளக்கத்தில் இருவரும் வேறுபடுகின்றனர். இவ்விரு நூல்களிலிருந்து தொடங்கி தலைசிறந்த பிற்கால இலக்கிய-இலக்கணங்களான நாட்டிய சாஸ்திரம், காவியலங்காரம், காவியதர்ஷம், காவியப்பிரகாசம் முதலிய நூல்கள் உவமை பற்றிக் கூறும் கருத்துக்களை முறையாகத் தொகுத்து, அந்நூல்கள் உவமையணிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இனம் காண்கிறது இக்கட்டுரை. சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற அந்நூல்கள் உவமையணி பற்றிப்பேசும் கருத்துக்களை தொகுத்து ஒப்பிடுவதன் மூலம், உவமை பற்றிய கருத்தாக்கத்தில் சமஸ்கிருத இலக்கிய-இலக்கண ஆசிரியகளுக்குள் இருந்த ஒற்றுமையையும், முரண்பாடையும் அறியமுடியும்.